தென் அமெரிக்காவில் இருந்து பயணம் தொடங்கிய எம்.வி ஹோண்டியஸ் (MV Hondius) என்ற சொகுசு கப்பலில் ஹண்டா வைரஸ் பரவிய சம்பவம் உலக சுகாதார அமைப்புகளின் கவனத்தை தீவிரமாக ஈர்த்துள்ளது. கப்பலில் பயணித்த பிரிட்டன் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த மூவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அவசரமாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் நெதர்லாந்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கடந்த ஒரு மாத காலத்தில் இந்தக் கப்பலில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவருக்கு ஹண்டா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கேப் வெர்டே அருகே நங்கூரமிட்டு இருந்த கப்பல் ஸ்பெயினின் கனாரி தீவுகளை நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளது.

கப்பலில் 23 நாடுகளைச் சேர்ந்த 146 பேர் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி மேலும் 5 பேருக்கு வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தென் அமெரிக்காவில் பொதுவாக காணப்படும் ஆண்டிஸ் வகை ஹண்டா வைரஸ் மனிதர்களிடையே நெருங்கிய தொடர்பு மூலம் பரவியிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால் கப்பலில் இருந்த பயணிகளுடன் தொடர்பில் இருந்த அமெரிக்கா சுவிட்சர்லாந்து மற்றும் பிரிட்டனில் உள்ள பலர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், இது கோவிட்-19 போன்ற உலகளாவிய பெருந்தொற்றாக மாறும் அபாயம் தற்போது இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. “இது கோவிட் அல்ல; மிகவும் நெருக்கமான உடல் தொடர்புகள் மூலமே பரவக்கூடிய வைரஸ்” என்று WHO நிபுணர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார். கப்பல் கனாரி தீவுகளை வந்தடைந்ததும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்றும் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் ஸ்பெயின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading