இத்தாலி அரசின் 2026ம் ஆண்டுக்கான விவசாய பருவத் தொழிலாளர்களை தேர்வு செய்யும் முதல் ‘க்ளிக் டே’ வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இத்தாலியின் முன்னணி விவசாய அமைப்பான Coldiretti தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு (EU அல்லாத) தொழிலாளர்களுக்காக அரசு ஒதுக்கியிருந்த 30,000 இடங்களும் விண்ணப்பங்கள் தொடங்கிய அதே நாளில் முழுமையாக நிரம்பியுள்ளன. இதற்கு முன்பு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான இடங்கள் போதுமானதாக இல்லை என Coldiretti தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த ஆண்டு அரசு எடுத்துள்ள நடவடிக்கை ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
Coldiretti அமைப்பின் தொழிலாளர் பிரிவு தலைவர் ரோமானோ மாக்ரினி கூறுகையில் விண்ணப்பங்கள் தொடங்கிய உடனே போதிய எண்ணிக்கையில் இடங்கள் வழங்கப்பட்டதால் விவசாய நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி பணிகளை திட்டமிடுவதில் எளிதாகியுள்ளது என்றும் அனுமதி வழங்கும் காலம் கணிசமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய முறையின் மூலம் விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் அனுமதி கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 2026–2028 காலத்திற்கான இத்தாலியின் மூன்று ஆண்டு Flow Decree மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான சட்டபூர்வ வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவை சர்வதேச குடியேற்ற அமைப்பான IOM வரவேற்றுள்ளது.
இத்தாலியின் விவசாயத் துறையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதுடன், 1.85 லட்சம் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.





Leave a Reply