மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மன்னனை கைது செய்து விசாரித்து வருகிறது. மன்னனுக்கு 7ஆம் தேதி ஆஜராக சம்மன் வழங்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்பே கைது செய்திருப்பதாக செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார். அவரை தீவிரவாதியைப் போல தனி அறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
குதிரை பேர குற்றச்சாட்டை செல்லூர் ராஜூ மறுப்பு
முஸ்தபாவையும் மன்னனையும் நெருங்கிய நண்பர்கள் எனக் குறிப்பிட்ட செல்லூர் ராஜூ, கட்சிப் பதவிகளுக்கு பணம் பெறப்படுவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து மன்னன் பேசியதற்காகவே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறினார். எம்எல்ஏவை பணம் கொடுத்து வாங்கி ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் அதிமுகவுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
மக்களைச் சந்தித்தே அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும், குறுக்குவழியில் ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார். முஸ்தபா நேர்மையானவர் அல்ல என விமர்சித்த அவர், கவுன்சிலர் பதவிக்கு பணம் கேட்டதாகவும் குற்றம்சாட்டினார். விலைவாசி உயர்வு மற்றும் அரசின் மீதான அவப்பெயரை மறைக்க இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார். P M Mannan arrest தொடர்பாக காவல்துறை தனது கண்ணியத்தை காப்பாற்றும் என நம்புவதாக அவர் கூறினார்.
































