மாணவர்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி கடன்
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி, சின்ன திருப்பதி பகுதிகளைச் சேர்ந்த சிலர், சமூக சேவை செய்வதாகக் கூறி ‘பெஸ்ட் எம்பவர்மென்ட்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வந்ததாக தெரிகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களிடம், வெளிநாட்டு நிதியை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி எடுத்துக் கொடுத்தால், ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆயிரம் ரூபாய் கமிஷன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பியவர்கள் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கியுள்ளனர். அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி, மாணவர்களுக்குத் தெரியாமல் தனியார் வங்கிகளில் ‘பசுமாடு வளர்ப்பு மற்றும் விவசாயக் கடன்’ என்ற பெயரில் தலா ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடன் தொகை கணக்கில் வந்ததும், ஆயிரம் ரூபாய் கமிஷன் வழங்கிவிட்டு மீதித் தொகையை வேறு கணக்குகளுக்கு மாற்றியதாக கூறப்படுகிறது.
வங்கிக் கடன் தொடர்பான நோட்டீஸ்கள் வீடுகளுக்கு வந்த பின்னரே மாணவர்கள் மோசடியை அறிந்துள்ளனர். கேள்வி எழுப்பியவர்களுக்கு ரவுடிகள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த முஷ்ரப் பாட்சா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த Salem student loan fraud வழக்கில் சின்ன திருப்பதியைச் சேர்ந்த கண்ணகி (45), முத்துக்குமரன் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மோனிஷா உள்ளிட்ட மேலும் சிலரையும், போலி ஆவணங்களுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் வங்கி அதிகாரிகளையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

































