இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி துறை 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலகளாவிய வர்த்தக சவால்கள் தொடர்ந்தபோதிலும் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் 514 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தேங்காய் அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.இது கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 21% வளர்ச்சியாக பதிவாகியுள்ளது. உலகின் பல பகுதிகளில் கப்பல் போக்குவரத்து பாதிப்பு, மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல், கப்பல் கட்டணம், காப்புறுதி மற்றும் எரிபொருள் செலவுகள் அதிகரித்த நிலையிலும் இந்த வளர்ச்சி கிடைத்திருப்பது முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.
தேங்காய் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவிக்கையில் நாட்டில் அதிகரித்த தேங்காய் உற்பத்தி மற்றும் உலக சந்தையில் இலங்கை தேங்காய் சார்ந்த பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள உயர்ந்த தேவை ஆகியவை இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன என்றார்.குறிப்பாக தேங்காய் கரு சார்ந்த பொருட்கள், கொயர் (Coir) தொழிற்துறை தயாரிப்புகள் மற்றும் தேங்காய் ஓடு அடிப்படையிலான மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இளநீர் (King Coconut) ஏற்றுமதி மட்டும் சுமார் 33% வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கையின் இளநீர் ஏற்றுமதியில் சுமார் 95% துபாய் சந்தையையே சார்ந்திருப்பதால் அங்குள்ள சந்தை மற்றும் போக்குவரத்து சவால்கள் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி துறை தொடர்ந்து வலுவாக வளர்ச்சி பாதையில் பயணிப்பது நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு முக்கிய ஊக்கமாக பார்க்கப்படுகிறது.










Leave a Reply