ஏற்றுமதி வருவாய் மாற்றம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி (CBSL) புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. இதன்படி பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் பெற்றுக்கொள்ளும் ஏற்றுமதி வருவாயில் பயன்படுத்தப்படாமல் மீதமிருக்கும் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் இலங்கை ரூபாயாக மாற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு மாதத்தில் பெறப்படும் ஏற்றுமதி வருவாயில் அங்கீகரிக்கப்பட்ட செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்ட தொகையைத் தவிர மீதமுள்ள வெளிநாட்டு நாணயத் தொகை அடுத்த மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் ரூபாயாக மாற்றப்பட வேண்டும்.
மேலும் ஏற்றுமதி வருவாய் இலங்கைக்கு கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இந்த மாற்றம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நாணய மேலாண்மையை வலுப்படுத்தவும் நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு நாணய கையிருப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விதிமுறை ஏற்றுமதியாளர்களின் வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதுடன் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது.





Leave a Reply