ராகம மற்றும் மொரட்டுவை பகுதிகளில் இடம்பெற்ற கேபிள் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராகம பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது தொலைத்தொடர்பு ஒலிபரப்பு கோபுரங்களில் இருந்து கேபிள்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 17 கிராம் 700 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில் சுமார் ரூ.922,750 பெறுமதியான தொலைத்தொடர்பு கேபிள்கள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்ததுடன் சந்தேகநபர்களின் தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட கேபிள் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய ரத்துப்பஸ்வல மற்றும் கடவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனிடையே மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்ட குற்றத் தடுப்பு நடவடிக்கையின்போது தொலைபேசி கேபிள் திருட்டு உள்ளிட்ட பல சொத்து குற்றங்களுடன் தொடர்புடைய 51 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சுமார் ரூ.180,000 பெறுமதியான தொலைபேசி கேபிள்களை திருடியதுடன் பல வீடு உடைப்பு மற்றும் சொத்து திருட்டு சம்பவங்களுடனும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபரின் தகவலின் பேரில் திருடப்பட்ட தொலைக்காட்சி பெட்டியும் செம்புக் கம்பிகளும் மீட்கப்பட்டுள்ளன.இரு சம்பவங்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் தொடரும் நிலையில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் பல தகவல்களை பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.





Leave a Reply