தெற்கு கடற்பரப்பில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரும் போதைப்பொருள் சரக்குடன் தொடர்புடையவராக கைது செய்யப்பட்ட உள்ளாட்சி சபை வேட்பாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சமகி ஜனபலவெகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
‘X’ சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட அந்த நபரின் எஸ்.ஜே.பி உறுப்பினர் பதவி உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பாக தனி விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“போதைப்பொருள் வர்த்தகம் எமது சமூகத்திற்கு புற்றுநோயாகும். இந்த அருவருப்பான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையில் சட்டங்களை மாற்ற வேண்டியது அவசியம்,” எனவும் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், தெற்கு கடலில் மீன்பிடிக் கப்பல் ஒன்றை தடுத்து விசாரணை நடத்திய போது, எஸ்ஜேபி பன்னலையைச் சேர்ந்த உள்ளாட்சி சபை வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
இதேவேளை, இலங்கை கடற்படை 376 கிலோ கிராம் போதைப்பொருட்களை (ஹெரோயின் மற்றும் ஐஸ்) கைப்பற்றியிருந்தது, இதன் பெறுமதி சுமார் ரூ. 4 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.





Leave a Reply