முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் எவருக்கும் எதிர்ப்பு இல்லை என்றாலும் விசாரணை என்ற பெயரில் அநீதி அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறக் கூடாது என தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மைகள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதியான மற்றும் வெளிப்படையான விசாரணைகளே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் யுத்தம் முடிவடைந்த நாட்டில் அந்தச் சட்டம் தொடர வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார். அதற்குப் பதிலாக ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய சட்ட கட்டமைப்பு தேவை எனவும் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் பல முரண்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் உண்மையான சூத்திரதாரிகள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
அதேவேளை கடந்த கால ஆட்சிகளை விமர்சிப்பதை விட தற்போதைய அரசாங்கம் தனது செயல்பாடுகளால் மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.





Leave a Reply