உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை தன்னிச்சையான முறையில் அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சி தொடர்பான பொது கருத்தாடல் நிகழ்வில் உரையாற்றிய அவர் தற்போதைய விவாதம் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 அல்லது 70 ஆக உயர்த்துவது குறித்ததல்ல என்றும் தற்போது பதவியில் உள்ள சில நீதியரசர்களின் பதவிக்காலத்தை தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் மாற்ற முயற்சிப்பதே முக்கிய பிரச்சினை என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய மாற்றம் அவசியமற்றதோடு பொருத்தமற்றதுமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் நீதிக்கட்டமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தும் என்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதிலும் நீதித்துறையின் சுயாதீனத்தை நிலைநிறுத்துவதிலும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்த கேள்விகளை எழுப்பும் என்றும் எச்சரித்தார்.
எனவே நீதியரசர்களின் பதவிக்காலத்தை கட்டாய அடிப்படையில் நீட்டிக்கும் எந்தவொரு முயற்சியையும் அரசாங்கம் கைவிட்டு, நீதித்துறையின் சுயாதீனத்தையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தினார்.









Leave a Reply