தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டை முன்னேற்றுவதற்கான தெளிவான வேலைத்திட்டம் எதுவும் இல்லாமல் அரசியல் எதிரிகளையும் எதிர்க்கட்சியினரையும் கைது செய்து சிறையில் அடைப்பதையே பிரதான நடவடிக்கையாகக் கொண்டு செயல்படுவதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமன குற்றஞ்சாட்டியுள்ளார். காலி பத்தேகம பகுதியில் நேற்று (05) நடைபெற்ற சர்வஜன அதிகாரம் கட்சியின் மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் இந்த நிலை தொடர்ந்தால் இறுதியில் விவசாயிகளையும், “டெங்கு நுளம்புகளைக் கூட சிறையில் அடைக்க வேண்டிய நிலை ஏற்படும்” என விமர்சனமாகக் குறிப்பிட்டார்.
மேலும் இதுவரை நாட்டின் ஜனாதிபதிகள் கொழும்பு, கம்பஹா, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் இருந்து உருவாகியிருந்தாலும், எதிர்காலத்தில் காலி மாவட்டத்திலிருந்தே நாட்டின் தலைமைத்துவம் உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார். இடதுசாரி கொள்கை ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் தேசப்பற்று என்ற வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று அந்தக் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டு நாட்டின் வளங்களை இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஒப்படைத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதேவேளை, விவசாயிகள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெல், காய்கறி, உருளைக்கிழங்கு, தேயிலை, கறுவா உள்ளிட்ட அனைத்து பயிர்ச் செய்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய அரசியல் சக்தியாக சர்வஜன அதிகாரம் உருவாகியுள்ளதாகவும் அதன் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் விவசாயிகளுக்கு உரிய மரியாதை, பாதுகாப்பு மற்றும் தலைமைத்துவ இடத்தை பெற்றுக்கொடுப்பதே தமது கட்சியின் நோக்கம் என்றும் சன்ன ஜயசுமன வலியுறுத்தினார்.








Leave a Reply