முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது. மேல் நீதிமன்ற நீதியரசர் உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்று (04) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதி தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மறுசீரமைப்பு மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த மனு மீதான விசாரணை ஜூன் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் அதுவரை மேல் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்னெடுக்கப் போவதில்லை என முறைப்பாட்டாளர் தரப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் சாட்சிகளை அழைக்காமல் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதியரசர் வழக்கை ஜூலை 9 ஆம் திகதி வரை ஒத்திவைத்து அன்றைய தினம் சாட்சிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டார்.
சுமார் 73 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐந்து காணித் துண்டுகளை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





Leave a Reply