ADB அவசர உதவி திட்டத்தின் கீழ் மத்திய கிழக்கு மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அறிவித்துள்ளது. இந்த உதவியைப் பெறும் 15 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம் காரணமாக பல நாடுகள் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் 3 பில்லியன் டொலர் அரசாங்கங்களின் கோரிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 1 பில்லியன் டொலர் எரிசக்தி மற்றும் உணவு இறக்குமதிக்கான வர்த்தக நிதி வசதியாக வழங்கப்படவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கான்டா (Masato Kanda) தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் உறுப்பு நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் பிஜி உள்ளிட்ட 15 நாடுகள் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக உதவி கோரியுள்ளன. மேலும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் சில நாடுகளுடனும் கலந்துரையாடல்கள் தொடர்ந்துவருகின்றன.
ADB அவசர உதவி திட்டம் உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் நிதி மற்றும் சமூக பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.





Leave a Reply