வாகன இறக்குமதி செலவு நாளாந்த அடிப்படையில் கணிசமாக குறைந்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விளைவாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இன்று (12) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் 2025 ஆம் ஆண்டில் வழக்கமாக நாளொன்றுக்கு சராசரியாக 5.27 மில்லியன் அமெரிக்க டொலர் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டதாக தெரிவித்தார். எனினும் பொருளாதார நிலைமை குறித்த அச்சம் காரணமாக ஒரு கட்டத்தில் இந்த செலவு 6.8 மில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் வெளிநாட்டு செலாவணி மீதான அழுத்தம் இலங்கையையும் பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் வாகன இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் இறக்குமதியை ஒழுங்குபடுத்தும் சிறப்பு நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதன் பலனாக ஜூன் மாதத்தின் முதல் எட்டு வேலை நாட்களில் பொது விடுமுறைகளை தவிர்த்து வாகன இறக்குமதிக்காக மொத்தமாக 31.72 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது நாளொன்றுக்கு சராசரியாக 3.9 மில்லியன் அமெரிக்க டொலராகும்.
வாகன இறக்குமதி செலவு எதிர்பார்த்ததை விட குறைந்துள்ளமை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதை காட்டுவதாகவும் மத்திய கிழக்கு நெருக்கடி மேலும் தீவிரமடைந்தால் இறக்குமதி செலவுகள் மற்றும் வெளிநாட்டு செலாவணி தேவைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.





Leave a Reply