பார்ட்டேவுக்கு கனடா அனுமதி மறுப்பு வழங்கப்பட்டதால் கானா (Ghana) அணியின் முதல் உலகக்கோப்பை போட்டியில் நட்சத்திர மத்தியகள வீரர் தாமஸ் பார்ட்டே (Thomas Partey) பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கனடாவின் டொராண்டோவில் (Toronto) பனாமா (Panama) அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டிக்காக பயணிக்கத் திட்டமிடப்பட்டிருந்த பார்ட்டேவின் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
32 வயதான பார்ட்டே மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என வாதிட்டு வருகிறார். எனினும் விசாரணை இன்னும் நிறைவடையாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கனடா அரசாங்கத்தின் குடிவரவு விதிமுறைகளின் அடிப்படையில் அவரது நுழைவு அனுமதி மறுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக கால்பந்து நிர்வாக அமைப்பான FIFA விசா வழங்குவது அல்லது நுழைவு அனுமதி தொடர்பான முடிவுகளில் தங்களுக்குப் பங்கு இல்லை என்றும் அந்த அதிகாரம் முழுமையாக போட்டியை நடத்தும் நாட்டின் அரசாங்கத்திற்கே உரியது என்றும் தெரிவித்துள்ளது.
பார்ட்டேவுக்கு கனடா அனுமதி மறுப்பு வழங்கப்பட்டுள்ளமை உலகக்கோப்பை தொடரின் தொடக்கத்தில் கானா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அணியின் அனுபவம் மிக்க வீரர்களில் ஒருவரான பார்ட்டே இல்லாதது முதல் போட்டியில் கானாவின் திட்டங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என விளையாட்டு விமர்சகர்கள் கருதுகின்றனர்.
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042













Leave a Reply