சட்டவிரோத கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதாக கூறப்படும் இருவர் மீது வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியதில், இருவரும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாள்வெட்டு குழுவினர் தாக்குதல்
குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதன் பழிவாங்கலாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று மாலை சுமார் 6.00 மணியளவில் மாங்கேணி பகுதியில், மோட்டார் சைக்கிள்களில் வந்த 15 பேர் கொண்ட வாள்வெட்டு குழுவினர், குறித்த இருவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காயமடைந்தவர்கள்
இந்த தாக்குதலில்,
- செல்வபுரம், மாங்கேணியைச் சேர்ந்த 40 வயதுடைய பொன்னம்பலம் ஜெயச்சந்திரன்,
- அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பொன்னம்பலம் சுரேந்திரன்
ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி – விசாரணை தீவிரம்
படுகாயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் விரைந்து சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதல் மேற்கொண்டு தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





Leave a Reply