அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்யச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மீது தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (17) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் பொலிஸாரின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு கடுமையான இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்த முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு காயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் பாதுகாப்பு அதிகாரிகளை ஏமாற்றி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதன் போது மொபைல் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்த முயன்றபோது சந்தேகநபர் அந்த உத்தியோகத்தரின் துப்பாக்கியை பலவந்தமாகப் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட கடுமையான கைக்கலப்பு மற்றும் பதற்ற நிலை காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் தற்காப்பு நடவடிக்கையாக சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். காயமடைந்த சந்தேகநபர் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் அம்பாறை உயர் பொலிஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





Leave a Reply