எட்டு வயது மகளை மூன்று முறை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மொத்தமாக 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பிரதிவாதிக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் 10,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 5 இலட்சம் ரூபாய் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அபராதத் தொகை செலுத்தப்படாவிட்டால் மேலும் நான்கு மாத சிறைத்தண்டனையும், இழப்பீட்டு தொகை செலுத்தப்படாவிட்டால் கூடுதலாக ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
2006.06.22 முதல் 2007.06.23 வரையிலான காலப்பகுதியில், தனது எட்டு வயது சிறுமி மகளை மூன்று தடவைகள் கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
சம்பவ காலப்பகுதியில் பிரதிவாதியின் மனைவி வேலை நிமித்தமாக வெளிநாட்டில் இருந்த நிலையில், பிரதிவாதியும் அவரது மகளும் மட்டும் சிறிய வீட்டில் வசித்து வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, குறித்த தந்தை தனது மகளுக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி பெறப்பட்ட அநாமதேய மனுவின் அடிப்படையில், பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
தந்தை கைது
அதனைத் தொடர்ந்து, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி மற்றும் காவல்துறையினர் இணைந்து வீட்டிற்கு சென்று சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்ததுடன், சந்தேகத்திற்குரிய தந்தையை கைது செய்தனர்.
இந்த வழக்கில் அனைத்து சாட்சியங்களையும் பரிசீலனை செய்த நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த கடுமையான தண்டனையை விதித்துள்ளது.





Leave a Reply