ஜனாதிபதி நிதியம் நாடளாவிய ரீதியில் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரே வருட காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் 59% இனால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு மொத்தமாக 5,277 மருத்துவ உதவி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இதேவேளை 2024 ஆம் ஆண்டில் 3,313 விண்ணப்பங்களும், 2023 ஆம் ஆண்டில் 3,456 விண்ணப்பங்களும் கிடைத்திருந்தன.

பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பங்களை ஏற்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், 2024 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் மேலதிகமாக 1,964 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இவ்விண்ணப்பங்களில் 70% க்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு இதுவரை மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

மாகாண ரீதியில் பார்க்கும்போது, 2025 ஆம் ஆண்டில் வட மாகாணத்தில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் 253% வீதத்தினால் அதிகரித்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் 135%, மத்திய மாகாணத்தில் 116% மற்றும் ஊவா மாகாணத்தில் 108% என கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது. இதன் மூலம் இதுவரை குறைந்த அளவில் பயன்பாட்டில் இருந்த பகுதிகளிலும் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் மக்களிடம் சென்றடைந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் ஜனாதிபதி நிதியத்தின் விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் ஆரம்பிக்கப்பட்டன. இத்திட்டம் மிகுந்த வெற்றியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக, ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் டிஜிட்டல் மற்றும் பரவலாக்கப்பட்ட முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வறுமை ஒழிப்பு நிவாரணங்கள், கல்வி புலமைப்பரிசில்கள், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை பாராட்டுதல், விசேட தேவையுடையோருக்கான நிதி உதவிகள், காட்டுயானை தாக்குதலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நிவாரணக் கொடுப்பனவுகள், தேசிய ரீதியில் நாட்டுக்காக சேவையாற்றியவர்களை கௌரவித்தல், விபத்துகள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிவாரணங்கள் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் தற்போது ஒன்லைன் வழியாகவும், எந்தவொரு பிரதேச செயலகத்தின் மூலமாகவும் பொதுமக்கள் அணுகும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இதன் மூலம், கடந்த 47 வருடங்களாக கொழும்பிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தற்போது நாடளாவிய ரீதியில் மக்கள் அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் மாற்றம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading