ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும், நாடளாவிய ரீதியில் க.பொ.த. (உயர்தரம்) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் திட்டத்தின் ஒன்பதாவது கட்ட நிகழ்வு, பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில், டிசம்பர் 14 ஆம் திகதி, டெம்பிள் ட்ரீஸ் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கட்டத்தின் கீழ், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. (உயர்தரம்) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மேல் மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதற்கமைய, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த 361 மாணவர்களுக்கு, மொத்தமாக ரூ.36.1 மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில்கள் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி நிதியம் என்பது மக்களுக்குச் சொந்தமான ஒரு பொது நிதியம் என்றும், அது பொதுமக்களின் நலனுக்காகவே செயற்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, விசேட அதிகாரம் அல்லது பதவிகள் உள்ளவர்களுக்கே அணுகக்கூடியதாகவும், பொதுமக்களுக்கு கடினமான நடைமுறைகள் கொண்டதாகவும் கருதப்பட்ட ஜனாதிபதி நிதியத்தை, இணைய வழி விண்ணப்பம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக எளிதில் அணுகக்கூடிய அமைப்பாக மாற்றுவதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய திட்டங்கள் அனைத்தும், நாட்டை முன்னேற்றுவதற்குத் தேவையான நவீன உலகத்துடன் ஒத்திசைந்த மனித வளத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுவதாகவும், 2026 ஆம் ஆண்டிலிருந்து கல்வி முறைமைக்குள் புதிய மாற்றங்களை கொண்டு வருவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், ஜனநாயகத்தை மதிக்கும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும், தலைமைத்துவம், கருணை மற்றும் சமூக பொறுப்புணர்வு கொண்ட மனித வளத்தை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசின் தலையீட்டின் கீழ் கல்வி மற்றும் அங்கீகாரம் பெறும் மாணவர்கள், சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், இன்று வழங்கப்படும் இந்த அங்கீகாரம் ஒரு முதலீடு என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

நிகழ்வில் உரையாற்றிய தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் துணை அமைச்சர் அனில் ஜயந்த, இதுவரை கடுமையான நோய்களுக்கு நிதி உதவி வழங்கும் அமைப்பாக மட்டுமே அறியப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் பயன்பாடு, புதிய அரசாங்கத்தின் கீழ் கல்வி துறையிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசாங்கத்தின் உள்ளடக்கத்தன்மை (Inclusivity) என்ற நோக்கு, ஜனாதிபதி நிதியத்தின் இலக்குகளுடன் நெருக்கமாக இணைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில்,
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தன சூரியாரச்சி, சந்திம ஹெட்டியாரச்சி, ஓய்வுபெற்ற லெப்டினன் கமாண்டர் பிரகீத் மதுரங்க,
மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசூப்,
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்,
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், கௌரவிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading