இந்த முயற்சி எந்தத் தேர்தல் கூட்டணியையோ அரசியல் அதிகாரப் போட்டியையோ நோக்கமாகக் கொண்டதல்ல என்றும் மக்கள் பங்கேற்பு பொறுப்புக்கூறல் மற்றும் அதிகாரங்களுக்கு இடையிலான சமநிலையை வலுப்படுத்தும் தேசிய ஜனநாயகப் பயணமாகும் என்றும் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் சிவில் சமூகத்தின் பங்களிப்பை பயன்படுத்திய அரசியல் தலைவர்கள் பின்னர் அவர்களை புறக்கணித்த வரலாறு மீண்டும் நிகழக்கூடாது எனத் தெரிவித்த அவர் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் “தேசிய மக்கள் இணக்கப்பாடு” ஒன்றை உருவாக்கி அதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் தரமற்ற நிலக்கரி இறக்குமதி, பெறுமதி சேர் வரி (VAT) விரிவாக்கம் போன்ற விடயங்களில் சிவில் சமூகத்தின் தொடர்ச்சியான அழுத்தமே அரசாங்கத்தை பின்வாங்கச் செய்ததாகக் குறிப்பிட்ட அவர் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயதை நீட்டிக்கும் முயற்சியும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகும் என்றும் எச்சரித்தார். ஜனநாயகத்தை பாதுகாக்க நீதித்துறை, சட்டமன்றம், நிறைவேற்று அதிகாரம் ஆகியவற்றுடன் சுதந்திர ஊடகங்களும் சிவில் சமூக அமைப்புகளும் இன்றியமையாத தூண்களாக விளங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



























