புதிய பாடசாலை வவுச்சர் திட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை புடவை மற்றும் ஆடை கைத்தொழில் நிறுவகத்தின் மேற்பார்வையின் கீழ் தரத்தை உறுதிசெய்து, ஓராண்டு உத்தரவாதத்துடன் கூடிய பாதணிகளை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு வழங்கவுள்ளது.
கல்வி அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு இணைந்து தொடங்கிய இந்த முயற்சி, 250இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள், 251–500 மாணவர்களைக் கொண்ட தோட்டப் பாடசாலைகள், விசேட தேவையுடைய பாடசாலைகள் ஆகியவற்றில் உள்ள மாணவ/மாணவிகளுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பாதணிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் நாடாளுமன்றக் குழு அறையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
உற்பத்தியாளர்கள் பாதணிகளை நேரடியாகப் பாடசாலைகளுக்கு விற்பனை செய்யவுள்ளதால், மாணவர்கள் சரியான அளவில் பொருந்தக்கூடிய பாதணிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இந்த முன்னோடித் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதன் சாத்தியக்கூறு ஆய்வுக்குப் பிறகு, இந்தத் திட்டம் ஏனைய மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலக ஜெயசுந்தர மற்றும் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்





Leave a Reply