வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் புது சேவை இன்று (24) காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பாவித்துள்ளார்களா என்பதைக் கண்டறியும் மருத்துவப் பரிசோதனைகளும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று முதல் ஆரம்பித்த பாதைகள்
இன்றைய தினம் வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் சேவை கீழ்க்கண்ட அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டது:
- மாகும்புர – மாத்தறை
- மாகும்புர – காலி
- மாகும்புர – பதுளை
- கொழும்பு – அம்பாறை
மேலும், இன்று இதே நேரத்தில் மேல் மாகாணப் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் ஊவா மாகாண போக்குவரத்து அதிகாரசபை இணைந்து பல பாதைகளில் இந்தச் சேவையைத் தொடங்கியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாளை (25) தொடங்க உள்ள புதிய பாதைகள்
- கொழும்பு – வவுனியா
- கடவத்தை – மகரகம
- மாகும்புர – தங்காலை
- மாகும்புர – அங்குனுகொலபெலஸ்ஸ
மேல் மாகாணத்தில் 2026க்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த திட்டம்
மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற கமாண்டர் காமினி ஜயசிங்க தலங்கம கொஸ்வத்தை பகுதியில் நடைபெற்ற விழாவில் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:
- இம்மாதம் மற்றும் டிசம்பர் மாதத்திற்குள் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துகளுக்கும் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும்.
- அடுத்த ஆண்டு ஜனவரியில், மேல் மாகாணத்தில் இயங்கும் சொகுசு பேருந்துகளுக்கு இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும்.
- தெரிவு செய்யப்பட்ட சில சாதாரண பேருந்துகளிலும் இதே முறை அறிமுகப்படுத்தப்படும்.
- 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள், மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் வங்கி அட்டை மூலம் பயணச்சீட்டு பெறும் முறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும்.
பொது போக்குவரத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையிலும், மீதிப்பணக் கோரிக்கை பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கிலும், மோசடிகளைத் தடுக்கும் வகையிலும் இந்த முன்னேற்றமான டிஜிட்டல் முயற்சி அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.





Leave a Reply