கண்டி இளம் மனைவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டசாலை வாராபிட்டிய பகுதியில் வசித்து வந்த 23 வயதுடைய திருமணமான பெண்ணின் உடல் இன்று (20) அதிகாலை அவரது கணவரின் வீட்டில் உள்ள படுக்கையறையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கண்டி இளம் மனைவி மரணம் தொடர்பாக அவரது உறவினர்கள் கடுமையான சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனினும் கணவர் அளித்துள்ள விளக்கத்தில் இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு அதிகாலை வீடு திரும்பியபோது மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் பின்னர் கயிற்றை வெட்டி உடலை படுக்கையில் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகையில் திருமணமாகி சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில் கணவரின் துன்புறுத்தலால் பலமுறை பெற்றோர் வீட்டிற்கு திரும்பிச் சென்றிருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் கணவர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் இதுதொடர்பாக பாலகொல்லை பொலிஸில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் விவாகரத்திற்காக நடவடிக்கை எடுக்க அந்த பெண் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் உயிரிழந்த பெண் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றை கணவரின் குடும்பத்தினர் பொலிஸாருக்கும் நீதவானுக்கும் கையளித்துள்ளனர். ஆனால் அந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்து தங்களது மகளுடையது அல்ல என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீதவான் உத்தரவின் பேரில் உடல் நீதிமருத்துவ பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து பாலகொல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







Leave a Reply