முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்டு வரும் உப்பள நிர்மாணப் பணிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அப்பகுதி மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்தும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் விளக்கம் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த ஜூன் 29ஆம் திகதி மாவட்டச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத உப்பள நிர்மாணம் குறித்து ஆராயப்பட்டு அதற்கான தீர்வை காணும் பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அப்பகுதி மக்களின் பூர்வீகக் காணிகளின் எல்லைகளை நில அளவைத் திணைக்களத்தின் மூலம் அடையாளப்படுத்துமாறு முன்னதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை உரிய நிர்வாக நடவடிக்கைகளோ அல்லது முன்னேற்ற அறிக்கைகளோ வெளியிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் நில உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் சட்டவிரோத உப்பளப் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் காணி எல்லைப்படுத்தல் பணிகளின் தற்போதைய நிலை குறித்து விரிவான விளக்க அறிக்கையை விரைவாக வழங்குமாறு மாவட்டச் செயலாளரிடம் ரவிகரன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.









Leave a Reply