ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும் என்றும் பாதாளக்குழுக்களுக்கு ஆதரவளித்த அரசியல் தரப்பினர் இந்த சட்டமூலத்தை எதிர்ப்பது ஆச்சரியமல்ல என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஸ் சலே கைது செய்யப்பட்டதாக கூறினார். சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் விசாரணைகளை சத்தியாகிரகப் போராட்டங்கள் மூலம் தடுக்க முடியாது என்றும் சட்டத்தின் முன் எவருக்கும் விசேட சலுகை வழங்கப்படமாட்டாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுரேஸ் சலேவுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுவோர் நீதிமன்றத்தின் மூலம் தமது நியாயத்தை முன்வைக்கலாம் என்றும் அதற்கு அரசாங்கம் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்து செய்யப்படும் என்றும் தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்திருந்தாலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்ந்தும் நிலவுவதால் அவற்றை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமாகியுள்ளது என்றும் பாதாளக் குழுக்களை ஒழித்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.









Leave a Reply