வேரவில் பிரதேச வைத்தியசாலை முன்பாக ஆரம்பமான பேரணி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மக்கள் பவனியாகச் சென்று கிராஞ்சி சந்திப்பில் நிறைவடைந்தது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “அநுரா அரசே பதில் சொல் மக்களின் குரலுக்குச் செவிசாயி!” “எமது நிலம் நமக்கு வேண்டும் எமது வளம் நமக்கு வேண்டும்!” “தமிழர் வளங்களைச் சுரண்டாதே!” மற்றும் “இரண்டாயிரம் குடும்பங்களின் வாழ்வியலைச் சிதைக்காதே!” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம், கனிம மணல் அகழ்வு மற்றும் சுண்ணாக்கல் அகழ்வு திட்டங்கள் இப்பகுதியின் இயற்கை வளங்களையும் சுமார் 2000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் எனக் குற்றஞ்சாட்டிய மக்கள் அபிவிருத்தி என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இத்திட்டங்களை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.



























