சூரியவெவ பிரதேசத்தில் உள்ள ஒரு பாடசாலையில், பாடசாலை அதிபர் தாக்கியதில் காயமடைந்த 16 வயதுடைய மாணவன் ஒருவர் தற்போது ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவன் கடந்த 8 நாட்களாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் சூரியவெவ காவல்துறையில் முறைப்பாடு செய்தபோதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணவனின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரின் மனைவி தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினராகப் பதவி வகிப்பதன் காரணமாகவே காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக, மாத்தறை – ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் தமது முறைப்பாட்டை முன்வைத்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மாணவனின் தாய் கருத்து தெரிவிக்கையில், பிள்ளை ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமே தவிர, மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடமும் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.





Leave a Reply