யாழ்ப்பாணம் வேலணை துறையூர் கிராமிய கடற்றொழில் அமைப்பின் சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் ஐஸ் உற்பத்தி நிலையம் இன்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரினால் திறந்து வைக்கப்பட்டது. மீனவர் சமூகத்தின் வாழ்வாதார முன்னேற்றம் தொழில் பாதுகாப்பு மற்றும் வடக்கின் கடல்சார் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போதைய கடற்றொழில் துறையில் மீன்வளப் பொருட்களின் தரத்தை பாதுகாப்பது மிக முக்கிய சவாலாக காணப்படுவதால் சுத்திகரிக்கப்பட்ட நன்னீரில் தயாரிக்கப்படும் தரமான ஐஸ்கட்டிகளை மீனவர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த உற்பத்தி நிலையம் மூலம் வேலணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் குறைந்த செலவில் தரமான பனிக்கட்டிகளைப் பெறுவதுடன் மீன்களை நீண்ட நேரம் தரமாக பாதுகாக்கும் வசதியும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் செலவுகள் குறைந்து, மீனவர்களின் வருமானத்தில் நேர்மறையான மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் அமைப்பின் நிர்வாகிகள் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.





Leave a Reply