இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக தனியான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தீவிரமாக எழுந்துள்ள நிலையில் அதனால் நாட்டின் ஏனைய மதங்களைப் பின்பற்றுவோருக்கும் தனித்தனி சட்டங்கள் உருவாக்கப்படுவதற்கான முன்னுதாரணம் ஏற்படுமா என்ற கேள்வியும் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்படுகிறது.
இலங்கை அரசியலமைப்பின் படி பௌத்த மதத்தையும் பௌத்த தர்மத்தையும் பாதுகாப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் முக்கிய கடமைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கேம தேரர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பௌத்த மதத்தை பாதுகாத்து வரும் மகா சங்கத்தினருக்கும் முக்கிய பௌத்த பீடங்களுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவி உடையின் மரியாதைக்கும் பௌத்த மதத்தின் கண்ணியத்திற்கும் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படும் களங்கத்தை நீக்குவதற்காக மதத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை மதகுருமார்களின் ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக நாட்டில் புதிய சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் தேவைப்படுகிறதா என்ற விவாதமும் வலுப்பெற்று வருகிறது.





Leave a Reply