உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் பல்வேறு சர்வதேச காலநிலை முன்னறிவிப்பு மையங்கள் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வலுவான எல் நினோ நிலை உருவாகும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளன. மே–ஜூலை காலப்பகுதியில் எல் நினோ உருவாகும் வாய்ப்பு 80 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வானிலைத் திணைக்களத்தின் மதிப்பீடுகளின்படி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வழக்கத்தை விட குறைவான மழைப்பொழிவு பதிவாகக்கூடும். இதனால் பல பகுதிகளில் வறட்சி நிலை உருவாகும் அபாயம் காணப்படுவதுடன் வெப்பநிலையும் சராசரியை விட அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நீர்வள முகாமைத்துவம், விவசாயம், மின்சார உற்பத்தி மற்றும் பொதுச் சுகாதாரத் துறைகள் மீது இந்த எல் நினோ தாக்கம் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை எதிர்கொள்ள பேரிடர் முகாமைத்துவ மையம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எல் நினோ காரணமாக ஆசியாவின் பல பகுதிகளில் அதிக வெப்பம் மற்றும் குறைவான மழைப்பொழிவு பதிவாகும் அபாயம் இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது உணவுப் பாதுகாப்பு, நீர்வள மேலாண்மை மற்றும் விவசாய உற்பத்தி ஆகிய துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



























