காலி–கொழும்பு பிரதான வீதியின் கட்டுக்குருந்த பகுதியில் நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பாட்டியும் 12 வயதுடைய பேரனும் உயிரிழந்துள்ளனர். பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்த விபத்து புதன்கிழமை (01) நள்ளிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருவளையில் நடைபெற்ற பொசன் போயா தின வழிபாடுகளை முடித்துவிட்டு நான்கு பேர் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த பாட்டியும் பேரனும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற தாத்தா பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதுடன் மற்றொரு பெண் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி முச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்து முழுவதும் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளதுடன் விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பேருந்து பயணி ஒருவர் சாரதியின் பையை திருடிச் சென்ற சம்பவமும் அதில் பதிவாகியுள்ளது. திருடப்பட்ட பையில் பேருந்தின் பதிவு ஆவணங்கள் மற்றும் சாரதியின் ஓட்டுநர் உரிமம் இருந்ததாக தெரிவிக்கப்படுவதுடன் விபத்தும் திருட்டுச் சம்பவமும் தொடர்பாக பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










Leave a Reply