மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபால மாவத்தை பகுதியில் அமைந்துள்ள இரு மாடிக் கட்டடத்தில் இயங்கி வந்த ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று (17) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மாத்தறை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் மாத்தறை இராணுவ முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்தால் குறித்த ஆடை விற்பனை நிலையத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டதுடன் அதனை ஒட்டியிருந்த மேலும் இரண்டு வர்த்தக நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்டுள்ள சொத்து சேதத்தின் மதிப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





Leave a Reply