‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் அரச அலுவலகங்களில் பொதுச் சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 23 பொது மாதிரி விண்ணப்பப் படிவங்கள் சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டதை முன்னிட்டு இன்று (01) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நாட்டில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்திற்கு மொழிப் பிரச்சினை முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்ததாக சுட்டிக்காட்டினார்.
அரச நிறுவனங்களில் சேவையைப் பெற வரும் ஒவ்வொருவரும் தாம் இரண்டாம் தரப் பிரஜைகள் அல்ல அனைவரும் சமமானவர்கள் என்ற உணர்வைப் பெற வேண்டும் என்றும் 23 விண்ணப்பப் படிவங்களை மும்மொழிகளில் வழங்குவது சிறிய நடவடிக்கையாக தோன்றினாலும், அதுவே பெரிய சமூக மாற்றங்களுக்கான அடித்தளமாக அமையும் என்றும் அவர் கூறினார்.
பன்மொழி பல்கலாசார மற்றும் பல மதங்களை கொண்ட சமூகமாக உள்ள இலங்கையில் ஒவ்வொரு குடிமகனும் தனது தாய்மொழியில் அரச சேவைகளைப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவது அரசின் அடிப்படை பொறுப்பாகும் என்றும், மொழி காரணமாக எந்த குடிமகனும் அச்சமோ அசௌகரியமோ உணரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசு என்பது அனைத்து மக்களுக்கும் சொந்தமான பொதுவீடு என்பதால் அதன் கதவுகள் அனைத்து மொழிகளுக்கும் திறந்திருக்க வேண்டும் என்றும் அனைத்து இன மக்களும் நம்பிக்கையுடன் வாழக்கூடிய அமைதியான இலங்கையை உருவாக்க இந்த வேலைத்திட்டத்தை நடைமுறையில் வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.































