அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தையில் புதிய பதற்றம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அணு மற்றும் பாதுகாப்பு தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் முன்வைத்த பேச்சுவார்த்தை முன்மொழிவுகளுக்கு பதிலாக அமெரிக்கா 5 முக்கிய நிபந்தனைகளை வைத்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதில் ஈரான் வைத்திருக்கும் சுமார் 400 கிலோ உயர்மட்ட யூரேனியத்தை வெளிநாட்டிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஈரானின் அணு நிலையங்களின் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் விதிப்பது வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரான் சொத்துகளை உடனடியாக விடுவிக்க மறுப்பது போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க மறுப்பது மற்றும் எதிர்கால உடன்படிக்கைகள் பேச்சுவார்த்தை நிபந்தனைகளின் கீழ் மட்டுமே அமல்படுத்தப்படும் என்பதையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஈரானும் தனது சொந்த நிபந்தனைகளை அமெரிக்காவிடம் முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஈரானுக்கு எதிரான தடைகளை நீக்குதல் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தல் போர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீது ஈரானின் அதிகாரத்தை அங்கீகரித்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கும்.
இந்த விவகாரம் மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக ஈரானின் அணு திட்டம் மற்றும் யூரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் நீண்டகாலமாக கவலை வெளியிட்டு வருகின்றன.





Leave a Reply