வவுனியா மாநகர சபையின் செங்கோல் முதல்வரின் அங்கி மற்றும் பதக்கம் என்பன முன்னாள் முதல்வரால் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மாநகர சபை செயலாளர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாக மாநகர சபை உறுப்பினர்கள் பிரேமதாஸ் மற்றும் சி. கிரிதரன் தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்கள் ஆளுநரின் உத்தரவின் பேரில் முன்னாள் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது தனிப்பட்ட பொருட்களுடன் மாநகர சபைக்குச் சொந்தமான செங்கோல், முதல்வரின் அங்கி மற்றும் பதக்கத்தையும் எடுத்துச் சென்றதாக குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மாநகர சபை செயலாளர் அதிகாரப்பூர்வமாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் பொலிஸார் மாநகர சபைக்கு வருகை தந்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் குறித்து விரைவாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்த விவகாரம் வவுனியா மாநகர சபையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் விசாரணையின் முடிவுகள் குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.










Leave a Reply