பூகோள யுத்தச் சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள் சுமார் 70 சதவீதத்தால் உயர்ந்துள்ளதால் இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவு 521 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (02) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த பாரிய பொருளாதார சுமையை திறைசேரியால் மட்டும் தாங்க முடியாது என்றும் அவ்வாறு செய்தால் மீண்டும் மக்களுக்கு அதிக வரிகள் விதிக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர் கூறினார். எரிபொருள் விநியோகம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்டுப்படுத்தப்படவில்லை எனவும் பொருளாதார நிலைத்தன்மைக்காக திறைசேரி எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய மூன்று தரப்பினரும் சுமையை பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தற்போதைய விலை அமைப்பின்படி அரச நிறுவனங்களும் தனியார் எரிபொருள் நிறுவனங்களும் டீசல் மற்றும் பெற்றோல் விற்பனையில் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஏப்ரலில் மக்கள் சலுகைக்காக திறைசேரியிலிருந்து 58,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும் அதன் மூலம் டீசல் மற்றும் பெற்றோல் மீது தற்காலிக சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் நுகர்வு சில பிரிவுகளில் குறைந்திருந்தாலும் உலக சந்தை விலை உயர்வால் இறக்குமதி செலவு கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். நிலக்கரி விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர் அந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றுகள் அரசியல் நோக்கமுடையவை எனவும் அரசாங்கம் நிலைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





Leave a Reply