மத்தியப்படுத்தப்பட்ட இலத்திரனியல் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக 2026 ஜூன் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை சமர்ப்பிக்க முடியாத அதிகாரிகளுக்கு, எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை எவ்வித அபராதமுமின்றி சமர்ப்பிக்கும் சிறப்பு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்கள் மத்திய மின்னணு அமைப்பின் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். 2026 மார்ச் 31ஆம் திகதி நிலவரப்படி வருடாந்த மற்றும் ஓய்வூதியத்திற்குப் பின்னரான பிரகடனங்கள் ஜூன் 30க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த நிலையில் ஜூன் 28 முதல் அதிகளவிலான பயனர்கள் ஒரே நேரத்தில் அமைப்பிற்குள் பிரவேசித்ததால் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதாக ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்தன.
இதனையடுத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னர் பதிவு செய்ய முயற்சித்தும் தொழில்நுட்பக் கோளாறால் செயல்முறையை நிறைவு செய்ய முடியாதவர்களுக்கும் பிரகடனத்தை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும் அபராதமின்றி ஜூலை 7 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மின்னணு அமைப்பைப் பயன்படுத்தும் போது ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக ஆணைக்குழுவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் பிரிவை தொடர்புகொண்டு தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.









Leave a Reply