இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயமாக வந்துள்ள மாலத்தீவு குடியரசுத் தலைவர் டாக்டர் முகமது முயிஸ்ஸு மற்றும் அவருடைய பிரதிநிதி குழுவினரை வரவேற்கும் நிகழ்வில் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சந்திப்பில் உரையாற்றிய அவர் மாலத்தீவு தலைவரை இலங்கையில் வரவேற்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு உறவுகள் மிகவும் நீண்ட வரலாற்றைக் கொண்டவை என்றும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ தூதரக உறவுகள் 1965 ஆம் ஆண்டு தொடங்கியிருந்தாலும், அதன் முன்பே வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகள் இருந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று குறிப்புகள் இலங்கை மற்றும் மாலத்தீவு இடையிலான பழமையான தொடர்புகளை வெளிப்படுத்துகின்றன என்றும் கூறினார்.
மேலும் கடந்த 2025 ஆம் ஆண்டு தாம் மாலத்தீவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மாலத்தீவு அதிபரை இலங்கைக்கு வருமாறு அழைத்திருந்ததாகவும் அந்த அழைப்பை ஏற்று வந்ததற்கு நன்றி தெரிவித்தார். இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் நட்பு உணர்வுடன் இணைந்துள்ள நாடுகளாக இருப்பதுடன் எதிர்காலத்தில் இந்த உறவுகள் மேலும் வலுவடையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்த விஜயம் இலங்கை மற்றும் மாலத்தீவு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய கட்டமாக பார்க்கப்படுவதுடன் பல துறைகளில் கூட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது.





Leave a Reply