உகண்டாவில் ராஜபக்ச குடும்பத்தால் பதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டி வரும் டொலர் தொகையை, ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் இதுவரை ஏன் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கத்தினர், ராஜபக்சர்களின் நிதி உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து கூறிவந்த நிலையில், இதுவரை அந்த நிதியை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரசாங்கத்தால் குறிப்பிடப்படும் அந்த நிதியை மீட்பதற்காக தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளதாகவும், இதற்காக சத்தியக் கடதாசிகளை வழங்கவும் தயாராக இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். தற்போது அந்த டொலர் தொகையை மீட்பதற்கு பொருத்தமான காலம் இதுவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படுவது அந்த இரு கட்சிகளின் தனிப்பட்ட தீர்மானம் எனவும், நாட்டின் ஜனநாயகம் பேணப்படுவதற்கு அவ்வாறான இணைவு அவசியமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
எதிரணியாக இணைந்து செயல்பட வேண்டிய இடங்களில் தாமும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என நாமல் ராஜபக்ச கூறினார்.





Leave a Reply