மக்கள் தமது உரிமைகளுக்காகவும் தமது உற்பத்திக்காகவும் போராடும் நிலைமை தற்போது உருவாகியுள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு விவசாய அமைச்சும் ஜனாதிபதியும் உடனடியாக தலையீடு செய்து தீர்வு வழங்க வேண்டும் என்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறீநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் வருமானத்தை அதிகரிக்க வெற் (VAT) வரி உள்ளிட்ட வரி விதிப்புகள் அமுல்படுத்தப்பட்டாலும் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் சுமைகளை எதிர்கொள்ளாத வகையில் அரசாங்கம் சுயாதீனமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார்.
உணவுப் பொருட்கள், கல்வி, வாழ்வாதாரம் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய துறைகளில் வரி தாக்கம் குறைக்கப்பட வேண்டும் என்றும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாத வகையில் வரி அறவீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
குறிப்பாக நெல்லுக்கான நிர்ணய விலை வழங்கப்படாததால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகள் கடும் நெருக்கடியில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த பிரச்சினையில் அரசாங்கம் அசமந்தப் போக்கில் தொடர்ந்தால் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவாகலாம் என அவர் எச்சரித்துள்ளார்







Leave a Reply