சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் புதிய அரசியலமைப்பு மக்களின் அங்கீகாரத்துடன் தற்போதைய ஆட்சிக்காலத்திலேயே உருவாக்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார். தற்போதைய அரசியலமைப்பு பல திருத்தங்களால் முரண்பாடுகளைக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியின்படி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் உறுதிப்பாட்டில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறினார்.

எனினும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆரம்பகட்டத்தில் பொருளாதார மீட்பு மற்றும் ஏழ்மை ஒழிப்பிற்கே முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் தற்போது அதற்கான சாதகமான விளைவுகள் கிடைக்கத் தொடங்கியுள்ள நிலையில் அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளும் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அனைத்து இன மக்களும் பங்காளிகளாக இணைக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார். மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சரவை அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இந்த ஆண்டுக்குள் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் விடயமும் புதிய அரசியலமைப்புடன் தொடர்புடையதாகும் என்றும் நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக கட்டமைப்பில் நீண்டகாலமாக காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக நிலையான தீர்வு வழங்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்