நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் முழுமையாக ஒழிப்பதற்கும் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு அமைச்சுக்கள், முப்படைகள் மற்றும் பொலிஸாரை இணைத்த விசேட கூட்டுத் திட்டம் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் மேல் மாகாணத்தில் டெங்கு பரவும் அபாயம் அதிகம் காணப்படும் 23 வலயங்களை இலக்காகக் கொண்டு தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளும் விசேட சுற்றிவளைப்புகளும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தின் மகரகம, கடுவெல, ஹோமாகம, கொதடுவ, பத்தரமுல்ல, பிலியந்தலை மற்றும் கொழும்பு மாநகர சபை பகுதிகள், கம்பஹா மாவட்டத்தின் பியகம, களனி, சீதுவை, ஜா-எல, மஹர, வத்தளை, நீர்கொழும்பு, மினுவாங்கொடை பகுதிகள் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை, பண்டாரகம, ஹொரண, இங்கிரிய, களுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்புகள் மற்றும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, தேசிய டெங்கு செயல்பாட்டு மையத்தின் ஊடாக பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு துல்லியமான நம்பகமான மற்றும் விரைவான தகவல்களை வழங்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கூடுதல் செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் நீர் தேங்கி நிற்கும் இடங்கள் குறித்து பொதுமக்கள் 0117 666 366 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன் அந்த தகவல்களின் அடிப்படையில் சுகாதார அவசரச் செயல்பாட்டு மையம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் வீடுகள் மற்றும் வளாகங்களை சுத்தமாக பராமரிக்காமல் டெங்கு நுளம்புகள் பெருக அனுமதிப்பவர்களுக்கு எதிராக பதவி, அந்தஸ்து அல்லது சமூக நிலை என்பதைக் கருத்தில் கொள்ளாமல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெங்கு கட்டுப்பாட்டில் அரசாங்கம் எந்தவித சமரசமும் இன்றி சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த உறுதியுடன் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.










Leave a Reply