சுரேஷ் சல்லாய் வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் பரபரப்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. முன்னாள் மாநில புலனாய்வு சேவை (SIS) இயக்குநரான சுரேஷ் சல்லாய் தற்போது எதிர்கொள்ளும் வழக்கில் அவரது மனநிலை குறித்து இரு தரப்பும் முற்றிலும் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்தன.சுரேஷ் சல்லாய் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் ஐந்து மனநல மருத்துவ நிபுணர்களின் அறிக்கைகளை சமர்ப்பித்து அவர் கடுமையான மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் தற்கொலை ஆபத்தும் காணப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பான சூழல் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
எனினும் அரசுத் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்தக் கோரிக்கைகளை கடுமையாக எதிர்த்தார். சுரேஷ் சல்லாய் முன்வைக்கும் மனநல பிரச்சினைகள் உண்மையானவை அல்ல என்றும் அவை ஆஸ்கர் விருது பெறத்தக்க நடிப்பு போன்றவை என்றும் அவர் வாதிட்டார். மேலும் கைது செய்யப்பட்ட பல மாதங்களுக்குப் பின்னரே இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.இரு தரப்பின் வாதங்களையும் கவனமாக கேட்ட நீதிவான் இந்த விவகாரம் தொடர்பான தீர்ப்பை ஜூன் 10ஆம் தேதி வழங்குவதாக அறிவித்துள்ளார். இதனால் சுரேஷ் சல்லாய் வழக்கு மீண்டும் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.





Leave a Reply