UK News
பிரிட்டனில் 18 வயதான மாணவர் ஹென்றி நோவாக் (Henry Nowak) குத்திக்காயங்களால் உயிரிழக்கும் நிலையில் இருந்தபோதும் அவரை சந்தேகநபராக கருதி பொலிஸார் கைவிலங்கிட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பையும் அரசியல் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த டிசம்பரில் இங்கிலாந்தின் Southampton நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
தாக்குதலை மேற்கொண்ட விக்ரம் டிக்வா (23) பொய்யான இனவெறி குற்றச்சாட்டை முன்வைத்ததால் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஆரம்பத்தில் அவரது விளக்கத்தையே நம்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நீதிமன்றத்தில் அந்த குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்கப்பட்டதுடன், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
வெளியிடப்பட்ட உடல் கேமரா Bodycam காட்சிகளில் “என்னை குத்திவிட்டார்கள் என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்று ஹென்றி நோவாக் மீண்டும் மீண்டும் கூறினாலும் ஒரு பொலிஸ் அதிகாரி “நீ குத்தப்பட்டதாக நான் நினைக்கவில்லை” என்று பதிலளித்தது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சில நிமிடங்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார். UK News
இந்த சம்பவம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் Keir Starmer இந்த வழக்கில் மிகவும் முக்கியமான கேள்விகளுக்கு பதில் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார். குறிப்பாக இனவெறி குற்றச்சாட்டு பொலிஸாரின் முடிவெடுப்பில் எந்தளவு தாக்கம் ஏற்படுத்தியது என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பொலிஸ் படை மன்னிப்பு கோரியுள்ளதுடன் ஒரு அதிகாரி பதவி விலகியதாகவும் மேலும் மூவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஹென்றி நோவாக் குடும்பத்தினர் இந்த துயர சம்பவத்தை இனவெறி அல்லது சமூக பிளவுகளை தூண்டும் வகையில் பயன்படுத்த வேண்டாம் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.













Leave a Reply