தையிட்டி விகாரையை இடிப்பதற்கு முன்பாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தையும், யாழ்ப்பாண கத்தோலிக்க தேவாலயத்தையும் உடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தையிட்டி போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முன்னதாக நல்லூர் ஆலயம் கிட்டு பூங்காவுக்கு அருகிலுள்ள இடத்தில் அமைந்திருந்தது. தற்போது உள்ள ஒல்லாந்தர் கோட்டை நல்லூர் ஆலயத்தின் கற்களை பயன்படுத்தியே கட்டப்பட்டுள்ளது. அவ்வாறு என்றால் முதலில் அந்த ஒல்லாந்தர் கோட்டையை உடைக்க வேண்டும்.
அதன்பின்னர் கிறிஸ்தவ தேவாலயங்களையும் இடிக்க வேண்டும். அதன் பின்னரே தையிட்டி விகாரை குறித்து பேச வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.
மேலும்,
“நல்லூர் ஆலயத்தின் கர்ப்பகிரகத்தில் முஸ்லிம் சமாதி ஒன்று இருப்பதாகவும், அதையும் உடைக்க வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“இந்த போராட்டம் யாரோ ஒருவரின் கட்டளைக்கு அமைய முன்னெடுக்கப்படுகிறது. இது உண்மையான சட்டப்போராட்டம் அல்ல. இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய எவரும் முன்வரவில்லை. வாக்குகளை குறிவைத்தே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன,” எனவும் குற்றம்சாட்டினார்.
எம்.பி. அர்ச்சுனாவின் இந்தக் கருத்துகள் சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், மதங்களுக்கிடையிலான ஒற்றுமையை பாதிக்கும் வகையிலான கருத்து என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Leave a Reply