யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது இடம்பெற்ற கைது நடவடிக்கை, அரசாங்கத்தினால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது, தமிழ்மக்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகளில், பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலின் கீழ் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரைக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த அமைதியான போராட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில், தம்மை உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் தேடித் தேடி கைது செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த கைது நடவடிக்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலாகவே தாம் பார்க்கின்றதாக தெரிவித்த தவிசாளர், குறித்த விகாரையை நிர்வகிப்பவர்கள் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை அத்துமீறிக் கைப்பற்றி, இராணுவப் பாதுகாப்பின் கீழ் சட்டவிரோத கட்டிடங்களை அமைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.

நீதிமன்ற தீர்ப்புகளை மதிப்பதாகக் கூறிய அவர், நீதிமன்ற உத்தரவுகளுக்கு பாதகமில்லாத வகையில் ஜனநாயக மற்றும் அகிம்சை வழியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதும், காவல்துறையினர் அநியாயமாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் குருந்தூர் மலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் பௌத்த சிங்கள பேரினவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் கூட முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அமைதியாகவும் சட்டத்திற்கு உட்பட்ட முறையிலும் போராடிய தங்களை கைது செய்தது, தங்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பை மீறும் செயலாகும் எனக் கூறிய தவிசாளர், இலங்கையை பௌத்த சிங்கள தேசமாக மாற்றும் அரசாங்கத்தின் கொள்கைக்கு காவல்துறையினர் செயல்வடிவம் அளிப்பதாகவே இந்த நடவடிக்கைகள் உள்ளதாக தாம் கருதுவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading