தனது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மக்களின் காணிகளை அபகரிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மக்களின் காணிகள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தற்போதைய அரசாங்கமும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களின் காணிகளை விடுவிப்பதாக உறுதியளித்திருந்த போதிலும் இதுவரை அதற்கான நடைமுறை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
மருதங்கேணி பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீட்டு நடவடிக்கையே சுவீகரிப்பு முயற்சியின் தொடக்கமாக இருப்பதாகக் கூறிய அவர் அந்த அளவீட்டை தடுக்க பொதுமக்கள் அமைதியான முறையில் ஒன்றுகூடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறும் அழைப்பு விடுத்தார். காணி உரிமையை பாதுகாப்பது வடக்கு மக்களின் அடிப்படை உரிமை என்றும் அதற்காக அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்




























