விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முக்கியமான தீர்மானமாக எதிர்காலத்தில் மருத்துவம், பொறியியல் விவசாயம் உள்ளிட்ட தங்களது திறமைகளுக்கு ஏற்ற எந்தவொரு பல்கலைக்கழகப் படிப்பையும் தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர், இதற்கு முன்பு இந்த மாணவர்கள் கலை, மேலாண்மை, பௌதிக அறிவியல் மற்றும் உயிரியல் அறிவியல் போன்ற வரையறுக்கப்பட்ட துறைகளில் மட்டுமே கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசாங்கம் அந்தக் கட்டுப்பாட்டை நீக்கி அனைத்து உயர்கல்வித் துறைகளுக்கும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக கூறினார்.
மேலும் விசேட தேவையுடையோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலமும் சைகை மொழியை சட்டப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கும் சட்டமூலமும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். குறைந்த வருமானம் பெறும் சுமார் 1,75,000 விசேட தேவையுடைய குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 வாழ்வாதார உதவி வழங்கப்பட்டு வருவதோடு 2026 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூடுதலாக மாதம் ரூ.5,000 கொடுப்பனவு வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் நாட்டின் 17 அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் சுமார் 370 விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் அடுத்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் சேரும் அனைத்து விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நேரடி நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.











Leave a Reply