பிரிட்டனில் வங்கி விடுமுறை வார இறுதி தொடங்கியுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 30°C-ஐத் தாண்டும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக தென் இங்கிலாந்து மற்றும் மிட்லாந்து பகுதிகளில் வெப்பம் அதிகரித்து அடுத்த வார தொடக்கத்தில் 33°C வரை பதிவாகக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மே மாத வெப்பநிலை சாதனைகளையும் முறியடிக்கக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையால் இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு சுகாதார எச்சரிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன. முதியவர்கள் உடல்நலப் பிரச்சினைகள் கொண்டவர்கள் மற்றும் சிறுவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்கள் பூங்காக்கள் கடற்கரைகள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளுக்கு திரள்வதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. அதேவேளை வடக்கு அயர்லாந்து மற்றும் மேற்குப் ஸ்கொட்லாந்து பகுதிகளில் மேகமூட்டம் மற்றும் சிறிய மழை வாய்ப்புகள் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை உயர்வால் லண்டன் உள்ளிட்ட சில நகரங்கள் ஏதென்ஸ் மற்றும் மெடிட்டரேனியன் பகுதிகளைவிட கூட அதிக வெப்பமாக இருக்கக்கூடும் என வானிலை மையங்கள் கூறுகின்றன. மக்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்கவும் நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.





Leave a Reply